Published : 18 Feb 2025 12:33 AM
Last Updated : 18 Feb 2025 12:33 AM
திருநெல்வேலி: வட அமெரிக்க நாடான ஜமைக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி இளைஞர் விக்னேஷ் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. செலவுத் தொகையை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர், ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜனின் மகன் விக்னேஷ் (31), ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அவருடன் திருநெல்வேலியை சேர்ந்த மேலும் 3 பேர் வேலை செய்தனர். கடந்த டிசம்பர் 18-ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு, பொருட்களை கொள்ளையடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் விக்னேஷ் உயிர்இழந்தார்.
இச்சம்பவம் நடந்து 60 நாட்களாகியும் விக்னேஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. இதுகுறித்து, விக்னேஷின் தாயார் பொன்னம்மாள், சகோதரி ருக்மணி ஆகியோர், திருநெல்வேலிக்கு அண்மையில் வந்திருந்த தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர். விக்னேஷின் உடலை தாய்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்திருந்தார். மும்பை விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டதும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
குடும்பத்தினர் வேதனை: இதனிடையே, விக்னேஷின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரத்தில் முடிவடைந்து விட்டதாகவும், தேவையான பணத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் ஜமைக்கா நாட்டில் இருக்கும் நிறுவனம், விக்னேஷின் குடும்பத்தாரிடம் தொடர்ந்து பேசி வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தாங்கள் தகவல் அளித்து விட்டதாகவும், ஆனால், இதுவரை அதற்கான தொகை அந்த நிறுவனத்துக்கு சென்று சேரவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி விக்னேஷின் உடலை இந்தியா அனுப்புவதற்கான பணம் 18,565 அமெரிக்க டாலரை (ஏறக்குறைய ரூ.15 லட்சம்) கேட்டு ஜமைக்கா நிறுவனம், இந்திய அரசுக்கு இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. இச்செலவை ஏற்க இந்திய வெளியுறவுத் துறை முன்வந்துள்ளது. ஆனால், உடலை அனுப்பிவிட்டு, தங்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது.
இதை ஏற்க ஜமைக்கா நிறுவனமும் விக்னேஷ் வேலை பார்த்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமும் தயாராக இல்லை. இந்திய அரசிடம் இருந்து பணம் வருவதற்கு கால தாமதம் ஆகுமோ என்ற தயக்கமே இதற்கு காரணம். பிரேதப் பரிசோதனை முடிந்து, பேக்கிங் செய்யப்பட்டு காத்திருப்பில் உள்ள விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அவரது உறவினர்கள் தற்போது கண்ணீருடன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி கூறும்போது, ‘‘விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவதற்கான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு, உரிய தொகையையும் செலுத்தஉள்ளது. அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பீடி சுற்றி பிழைப்பு நடத்தும் விக்னேஷின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT