

கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி, கடந்த 14-ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் புஷ்பாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த 17-ம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பப்பட்டார்.
வெளியே வந்த, காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த அரசு இந்துக்களுக்கு விரோதமாக நடக்கிறது. இந்த அரசுக்கு ஏழரை சனி பிடித்திருக்கிறது. 2026-ல் இந்த ஏழரை சனி என்ன என்பதை காட்டும். கடந்த 24-ம் தேதி ஒரு இயக்கத்தினர் நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துடியலூரில் சர்வசாதாரணமாக வங்கதேச இஸ்லாமியர்கள் வந்து தொழுகை செய்கின்றனர் என புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் பேசியதற்கு என் மீது வழக்குப் பதிந்து சம்மன் அனுப்பியுள்ளனர். இதை நான் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன்.
திருப்பரங்குன்றத்தில் எப்படி ஒரு எழுச்சி வந்ததோ, அதே போன்ற ஒரு எழுச்சி துடியலூரிலும் வரப் போகிறது. இன்றும், நாளையும் என்னை விசாரணைக்கு வர அறிவுறுத்தியுள்ளனர்’’ என்றார். இந்நிகழ்வின் போது, பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.