“மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்கிறது பாஜக” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

மதுரை: ‘‘மக்கள் வரிப்பணத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது’’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் கல்வியில் பிஹார், ராஜஸ்தான், ஏன் குஜராத்தை தமிழகத்துடன் ஒப்பிடுகையில் பாதி அளவிற்கு கூட அம்மாநிலங்கள் வர முடியாத நிலை உள்ளது. அண்ணா கூறியபடி தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருமொழிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி உலக அளவில் இன்றைக்கு நம் இளைஞர்கள் பல சிறந்த பணிகளிலும் அரசு உயர் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். இருமொழிக் கொள்கையில் குறை மட்டும் இல்லை என்பதைத்தாண்டி நிறை இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம்.

இருமொழிக் கொள்கை கூட செயல்படுத்த முடியாத பல மாநிலங்களில் ஒரு மொழியை வைத்து அதையும் கூட சரியாக செயல்படுத்தாத மாநிலங்கள் நீங்கள் எங்களுடைய கொள்கையை தான் பயன்படுத்த வேண்டும் எனச்சொல்வது பொருத்தமற்றது. ஆனால், கொள்கை விருப்பமாக சட்டத்தில் இடம்பெறாத புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து விட்டு நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு ஜனநாயக முறைப்படி சட்டமைப்பு படி 15-வது நிதிக்குழு படி தர வேண்டிய நிதியை தர முடியாது எனச் சொன்னால் இது கொடூரமான சர்வாதிகாரி செய்யும் வேலை.

மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்கிறோம் என்பதை ஒன்றிய அமைச்சர் தனது வாயாலே ஒப்புக்கொண்டு விட்டது நல்ல விஷயமாகும். சட்டமைப்பில் எங்கே இடம் பெற்றுள்ளது என மிக தெளிவாக முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் போய் நிற்க போகிறது. ஒரு மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின் படி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரையை வழங்கப்பட வேண்டிய பணத்தை வழங்காமல் கட்டாயப்படுத்தி வெளிப்படையாக பேசி இருப்பது சட்டமைப்புக்கு விரோதமானது. சட்ட அமைப்பால் நடத்தப்படுகிற ஒரு நாட்டில் ஒன்றிய அமைச்சரின் வார்த்தையை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in