Published : 17 Feb 2025 07:39 PM
Last Updated : 17 Feb 2025 07:39 PM

‘தமிழகம் ஒன்றிணையும்’ - தேசிய கல்விக் கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கோப்புப் படம்

சென்னை: ‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்புக்கு, தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் (திமுக), கி.வீரமணி (திக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்). வைகோ (மதிமுக), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்) , முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.எம்.காதர்மொகிதீன் (ஐயுஎம்எல்), திருமாவளவன் (விசிக), அருணாசலம் (மநீம), எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மநேம), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய மோடி அரசு எடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார். பதவிக்காலம் முடிந்துபோன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகின்றனர்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும் கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பாஜகவை அண்டவிடாத தமிழக மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழகத்தை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழகம் ஒன்றிணையும், எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக சொல்வது என்ன? - இதனிடையே, “தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கு தமிழக அரசு முதலில் சம்மதம் தெரிவித்தது. தற்போது எதிர்க்கின்றனர். தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறாக திசை திருப்புகிறார். 1965-ம் ஆண்டு ஆட்சி இப்போது நடக்கவில்லை, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் இன்று எழுந்துள்ளது” என தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முதல்வர் உட்பட தமிழக அமைச்சர்களின் மகன், மகள், பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாவது ஒரு மொழியை கற்பிக்கக் கூடாதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 1960-ல் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமல்ல” என்று கூறியுள்ளார்.

“தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்வது சரியில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதேபோல், “மும்மொழி கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழகத்துக்கு உடனே நிதியை விடுவிக்க வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர் காட்டம்: “மும்மொழிக் கொள்கையை சட்ட விதிமுறைகள் என்கிறார் மத்திய அமைச்சர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது என்பதை கல்வி அமைச்சரால் கூற முடியுமா, மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச்சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேபோல், “நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு திட்டவட்டம்: இதனிடையே, டெல்லியில் செய்தியாளரிடம் இன்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது என்பதை அறிவேன். மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, ஒரு சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்துக்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது புதிய லட்சிய பொதுத் தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

தமிழர் நாகரிகம், தமிழர் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை ஊக்குவிக்க நாங்கள் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி என்பதைதான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. இந்தியோ அல்லது வேறு எந்த ஒரு மொழியுமோ திணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை விஷயத்தில் சில நிபந்தனைகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x