Published : 17 Feb 2025 06:56 PM
Last Updated : 17 Feb 2025 06:56 PM
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதால் தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை வரும் 19-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
செங்கை புறநகர்ப் பகுதிகளில் வளர்ந்து வரும் முக்கிய நகரம், சிங்கப்பெருமாள் கோவில். சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இங்கு சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் சாலையிலுள்ள ரயில்வே கேட் வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்குச் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடந்த திமுக, ஆட்சியில் 2008-ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் 2021-ல் திமுக மீண்டும் புதிதாக 'டெண்டர்' விடப்பட்டு ரூ. 138.27 கோடி மதிப்பில், 2021 நவம்பரில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின. 30 மாதங்களுக்குள் மொத்த பணிகளும் முடிக்க வேண்டும் எனக் கால நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது தாம்பரம் மார்க்கத்தில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதால் தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை நாளை 19-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறக்கவுள்ளனர். இந்த மார்க்கம் திறக்கப்பட்டால் 60 சதவீதம் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுக்கால கனவு நிறைவேறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT