“பாஜகவை காப்பாற்றுவதே அதிமுகவின் வேலை” - திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா விமர்சனம்

எம்.எம்.அப்துல்லா | கோப்புப்படம்
எம்.எம்.அப்துல்லா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல” என்று திமுக அயலக அணிச் செயலாளரும், எம்பியுமான எம்.எம்.அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக எப்போதெல்லாம் தமிழம மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள். மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் திமுகவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள். பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.

இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அதிமுக. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

தமிழக மக்களின் உரிமைகளை மத்திய பாஜக அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதிமுகவின் நிரந்தரக் கொள்கை” என்று அவர் விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in