

திருப்பூர்: “அமெரிக்க அதிபர் ட்ரம்பைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சி நடுங்குகிறார்” என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் விமர்சித்தார்.
திருப்பூர் தொகுதி எம்.பி., கே.சுப்பராயன் திருப்பூரில் இன்று (பிப்.17) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக நலன்களுக்கு விரோதமான முறையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது. காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. பொறுப்புள்ள இடத்தில் இருந்துகொண்டு பொறுப்பற்ற பேச்சை கல்வி அமைச்சர் பேசியிருக்கிறார். தமிழக கல்விக்கு அளிக்க வேண்டிய ரூ.2,153 கோடி நிதியை விடுவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கு எதிரான போர் பிரகடனம் போல் தெரிகிறது. தமிழகம் இதனை சந்திந்து, போராடி முறியடிக்கும்.
மத்திய பட்ஜெட் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உரியது அல்ல. பிஹார் மாநிலத்துக்கான பட்ஜெட்டாக உள்ளது. 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் கிராமங்களில் மலையாளி என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மலைவாழ் மக்களாக உள்ளனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்குவதில்லை. இது தொடர்பாக 2 முறை மக்களவையில் பேசியும், நடவடிக்கை இல்லை. மத்திய அரசு இதனை செய்து தர வேண்டும்.
அந்நிய செலவாணியை அதிகம் ஈட்டித்தரும் நகரமாக திருப்பூர் உள்ளது. அந்நிய செலவாணி மூலம் வருவாய் ஈட்டும் மத்திய அரசு, திருப்பூர் உட்கட்டமைப்பை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய அரசை விமர்சித்ததால், இன்றைக்கு தனியார் பத்திரிகை இணையதளம் முடக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக கை, கால்களில் விலங்கிடுவது அநாகரிகமான முறை. ட்ரம்பைக் கண்டால் அஞ்சி நடுங்கும் பிரதமராக மோடி உள்ளதுதான் வெட்கக்கேடு.
கால்நடைகளை வேட்டையாடும் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. தமிழக அரசு இதற்கு செவிசாய்த்து, உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.