விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மின்வாரியம் முடிவு: காரணம் என்ன?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மின்பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக அறிவதற்காக, விவசாய மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விவசாயத்துக்கு மின்வாரியம் இலவசமாக மின்விநியோகம் செய்து வருகிறது. தற்போது 23.55 லட்சம் விவசாய மின்இணைப்புகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் வீடுகள், கடை, விவசாயம் உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரே வழித் தடத்தில் மின்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயத்துக்கு 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.பல கிராமங்களில் விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்யாத நேரத்திலும் மின்சாரம் பயன்படுத்தப் படுகிறது.

இதனால், அந்த வழித் தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டு மின்சாதனங்கள் பழுதடைகின்றன. எனவே, விவசாயத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது? என்பதை அறிய, மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது. மத்திய அரசு மின்பயன்பாட்டு விவரத்தை அறிய மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு மின்இணைப்பும் வழங்கக் கூடாது என மாநில மின்வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விவசாய மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின்கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை. மேலும், மின்பயன்பாட்டையும் அறிய முடிவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மா்ட் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் மீட்டரில் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிய முடியும்.

ஒவ்வொரு பிரிவிலும் தினமும் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் அறிய முடியும். இதன் மூலம், அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி, மின்கொள்முதல் செய்ய திட்டமிட முடியும். அதன்படி, விவசாய இணைப்புகளில் எந்த நேரத்தில் அதிகமாக, குறைவாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் தெரிந்தால், அதிக மின்பயன்பாடு உள்ள விவசாய இணைப்புகளில், அதற்கு ஏற்ப கூடுதல் திறனில் மின்சாதனங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால், மின்னழுத்த பிரச்சினையை தடுக்க முடியும். எனவே, விவசாய மின்இணைப்புகளில் சோதனை முயற்சியாக 1,200 இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in