Published : 17 Feb 2025 08:52 AM
Last Updated : 17 Feb 2025 08:52 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி திமுக-வில் இணையப் போகிறார் என்று வதந்திகள் வட்டமடித்த நிலையில், அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக்கி இருக்கிறார் பழனிசாமி. இவரோடு சேர்ந்து, முன்னாள் எம்எல்ஏ - வான ஆர்.சின்னசாமியும் அமைப்புச் செயலாள ராக்கப்பட்டிருக்கிறார். இப்படி ஒரே மாவட்டத்தில் இருவருக்கு திடீரென அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.
அதிமுக கோட்டை எனச் சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தலைமை நிலையச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், டெல்லி வரைக்கும் தனது நட்பு வளையத்தை விரித்து வைத்திருக்கிறார். பாஜக-வுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் வேலுமணி, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பவர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை திரட்டிக் கொண்டு சேலத்துக்கே சென்று பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியவர். இதையெல்லாம் பழனிசாமி அவ்வளவாய் ரசிக்கவில்லை என்றாலும் வேலுமணியை அவரால் தவிர்க்க முடியவில்லை. இப்படியான சூழலில் தான் கோவை ‘சாமிகளை’ அமைப்புச் செயலாளர்களாக அமரவைத்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், “அதிமுக-வில் 60-க்கும் மேற்பட்டோர் அமைப்புச் செயலாளர்களாக இருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்எல்ஏ-க்களை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்புகளை வழங்கி வருகிறார் பழனிசாமி. அந்த வகையில் தான் செ.ம.வேலுசாமிக்கும் ஆர்.சின்னசாமிக்கும் அமைப்புச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்களுடன் நெருக்கம் பாராட்டும் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பிரயாசைப்படுவதும் உண்மைதான். அதனால் அவருக்கு கடிவாளம் போட்டுவைக்க வேண்டும் என்பதற்காகவும் அவரது மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேரை அமைப்புச் செயலாளராக்கி இருக்கிறார் பழனிசாமி என்ற கருத்துகளும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இது உண்மையா என்பதை பழனிசாமியைக் கேட்டால் தான் தெரியும்” என்றனர்.
கோடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான வி.சி.ஆறுக்குட்டி திமுக-வில் இணைந்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் அப்படி யாரும் திமுக-வுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவும் பழனிசாமி இப்படி அணை போட்டிருக்கலாம் என்ற பேச்சும் கோவை அதிமுக-வில் தடதடக்கிறது.
இதுகுறித்து செ.ம.வேலுசாமியிடமே கேட்டோம். “அதிமுக-வில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்எல்ஏ-க்கள் 4 பேருக்கு அண்மையில் அமைப்புச் செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியின் முடிவு. இதில் வேறெந்த வியூகமும் இல்லை” என்றார் அவர். இப்படியான சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேறு அதிருப்திக் கொடி தூக்கி இருப்பது கொங்கு அதிமுக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT