Published : 16 Jul 2018 02:10 PM
Last Updated : 16 Jul 2018 02:10 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்; பாசனத்துக்காக வரும் 19-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேட்டூர் அணை வரும் 19 ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம். காவிரி நதிநீர் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. இந்த ஆணையில் சில மாற்றங்களை செய்து உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பை 16.2.2018 அன்று பிறப்பித்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சினையில் நடத்திய சட்டப் போராட்டத்தின் வழியினைப் பின்பற்றி, தமிழக அரசு எடுத்த பல தொடர் நடவடிக்கைகளினாலும், சட்டப் போராட்டத்தினாலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, 1.6.2018 அன்று அமைக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2.7.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற்று, அதில், தமிழ்நாட்டுக்கு, ஜூலை மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரை முழுமையாக விடுவிக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

மேட்டூர் அணை வழக்கமாக திறக்கும் நாளான ஜுன் 12 ஆம் தேதி அன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரூபாய் 115.67 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 99,372 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 51.72 டிஎம்சியாகவும் உள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிப்பது குறித்து, இன்று துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகளுடன் நான் கலந்தாலோசித்தேன்.

மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளின்படி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும், விவசாயிகளின் நீர் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜுலை 19 ஆம் தேதியிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இதன் மூலம், காவிரி மற்றும் காவிரிப் படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும்.

அத்துடன், வேளாண்மைத் துறை மூலம் சம்பா பருவத்தில் விவசாயிகள் நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், சிஆர் 1009, சிஆர் 1009 சப் 1, ஏடிடி 49 போன்ற நீண்ட கால நெல் ரகங்கள், டெல்டா மாவட்டங்களின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

சம்பா சாகுபடிக்குத் தேவையான டிஏபி, யூரியா, காம்ப்ளெக்ஸ் மற்றும் பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என நான் அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், தற்போது அமராவதி அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீரினை அனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறும் நான் அறிவுறுத்தியுள்ளேன்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x