Published : 17 Feb 2025 05:42 AM
Last Updated : 17 Feb 2025 05:42 AM
சென்னை: சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கட்டிடக் கழிவுகளை மக்கள் ஆங்காங்கே கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். கட்டிடக் கழிவுகள் கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை, கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல்களை மாநகராட்சி இணையதளத்தில் https://chennaicorporation.gov.in/ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்மீது, சேவை வழங்குபவர்கள், பில்டர்கள், கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 30 நாட்களுக்குள் swmdebriswaste@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்" என்று அறிவித்துள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதலில், பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படு்ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் கிலோ வரை கட்டிடக் கழிவுகளை சென்னை மாநகராட்சியே இலவசமாக எடுத்துச் செல்லும். ஒரு டன்னுக்கு மேல் 20 டன் வரையிலான கழிவுகளை எடுத்துச் செல்ல ரூ.2,500 வசூலிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT