Published : 17 Feb 2025 05:36 AM
Last Updated : 17 Feb 2025 05:36 AM
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்கள், விவசாயிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாடு அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.
ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து சுமைகளையும் மக்கள் தலையில் வைத்துவிட்டனர். ஆனால், போலி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் திமுகவினர் கவலைப்படுவதில்லை.
வேங்கைவயல் விவகாரத்தில் புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி மிகப்பெரிய அநீதியை திமுக அரசு அரங்கேற்றி உள்ளது. இது திமுக அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது. மக்களை ஏமாற்றும் மாயாஜால வேலைகளை திமுக செய்கிறது. திமுக என்றாலே, ஏமாற்றுவது, ஊழல் செய்வதுதான்.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 2026-ல் பாஜக தலைமையில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT