ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
Updated on
1 min read

ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்துவது மற்றும் அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ‘மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு நிலை - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை’ என்ற அறிக்கையை மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் கடந்த 13-ம் தேதி வெளியிட்டார். இதில், கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு, பொறுப்புடைமை ஆகிய 6 குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும், அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதல் இடத்தில் உள்ளது. செயல்முறைப்படுத்தும் காரணிகள் கணக்கீட்டின்படி தமிழகம் அதிக மதிப்பெண்களையும், ‘திறன் மேம்பாடு' மற்றும் ‘செயல்பாடுகள்’ ஆகியவற்றில் 2-வது இடத்தையும், நிதி பரிவர்த்தனைகளை பொருத்தவரை தமிழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த குறியீட்டின்படி மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஊரக திட்டங்களில் ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஊரக உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகளின் ‘திறன் மேம்பாடு’ என்ற பரிமாணத்தில் தேவையை மதிப்பிடுவதிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கான பயிற்சியை நடத்துவதிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ‘பயிற்சி நிறுவனங்களின்’ குறியீட்டில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in