

மதுரை: மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது திமுக என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கட்டம் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜசிம்மன் இன்று நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பாஜக மாவட்ட தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, சிவலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ராஜரத்தினம், சசிராமன், ரவிபாலா, சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
இதில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் பேசியதாவது: “மதுரையில் டங்ஸ்டன் போராட்டம், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தால் உருவான பொறி மொத்த தமிழகத்துக்கும் போகப்போகிறது. மதுரையிலிருந்து தான் பாஜகவின் மாபெரும் வெற்றி தொடங்கப்படுகிறது. பாஜகவை நோட்டாவுக்கு பின்னால் இருப்பதாக கிண்டல் செய்தவர்கள் இப்போது வாயடைத்துள்ளனர். டெல்லி தேர்தலில் பாஜக 7 லட்சத்துக்கும் அதிக வாக்குகளை வாங்கியது. மொத்த டெல்லியிலும் கம்யூனிஸ்ட் கட்சி வாங்கிய வாக்கு 2500-க்குள் தான். இனி கம்யூனிஸ்ட் கட்சி பாஜக குறித்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.
மத்திய பட்ஜெட் குறித்து தமிழகத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்து வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக தாக்கல் செய்துள்ள மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது. இதை தவறாக விமர்சிக்கின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. சமஸ்கிருத மொழியை வளர்க்கின்றனர். இந்தியை திணிக்கிறார்கள் என திமுக எப்போதும் பேசுகிறது. இதை தவிர வேறு எதையும் திமுக பேசாது. காங்கிரஸ், திமுக கூட்டணி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த 10 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற வார்த்தை 5 முறை இடம் பெற்றது. தமிழகத்துக்கு ரூ.8850 கோடி ஒதுக்கப்பட்டது.
பாஜக பத்தாண்டு ஆட்சியில் பட்ஜெட்டில் 5 முறை தமிழகத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு ரூ.1.68 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை வளர்க்க 160 அமைப்புகள் உள்ளன. தமிழை வளர்க்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தவிர வேறு ஒரு அமைப்பும் இல்லை. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு ரூ.80 கோடி ஒதுக்கியுள்ளது. திமுக அரசு தமிழை வளர்க்க என்ன செய்தது. தமிழ், தமிழ் என ஓட்டுக்காக பேசுகிறார்கள். தமிழை கெடுப்பதை தவிர வேறு எந்த வேலையையும் திமுக செய்வதில்லை. இதனால் தமிழை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறி மத்திய அரசிடம் திமுக அரசு ரூ.5880 கோடி பெற்றுள்ளது. இப்போது தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் என்றால் எப்படி? இதனால் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை தர முடியாது என மத்திய அமைச்சர் கூறியதில் என்ன தவறு உள்ளது?
திமுக அரசு மக்களை தான் ஏமாற்றுகிறார்கள் என்று பார்த்தால், மத்திய அரசையும் ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் போலி அரசு நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்களில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது. இந்தியால் தமிழ் அழிந்து போகும் என்றால் எப்படி? தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் அந்தமாநில மொழிகள் அழிந்துவிட்டதா? தமிழை அழிக்கும் முயற்சியை திமுக தான் செய்து வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.