Published : 16 Feb 2025 07:38 PM
Last Updated : 16 Feb 2025 07:38 PM
திருப்புவனம்: 'பிரதமர் குறித்த கேலி சித்திரம் நாட்டுக்கே அவமானம்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் தமாகா தொண்டரனி சார்பில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து வரும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்கள் பயன்பாடும், மதுக்கடைகளுமே காரணம். மதுக்கடைகளை குறைக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.
மத்திய அரசு அளவுகோல் வைத்து தான் ஒவ்வொரு தலைவருக்கும் பாதுகாப்பை வழங்கி வருகிறது. அதன்படி விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. பிரதமர் குறித்த கேலி சித்திரம் நாட்டுக்கே அவமானம். ஜனநாயகத்தின் 4-வது தூணாக உள்ள பத்திரிகைகள் மிக கவனமாக செயல்பட வேண்டும். தமிழ் தான் எங்களின் முதன்மை மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாட்டில் அதிகமானோர் இந்தி மொழி பேசி வருகின்றனர்.
அதனால் இந்தியும் தேவைப்படுகிறது. பிற மாநிலங்களை போன்று தமிழகமும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு இணக்கமாக சென்று கல்வித் திட்டங்களுக்கான நிதியை பெற வேண்டும். நமது பாரம்பரிய பெருமையான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டை போராட்டம் நடத்தி மீட்டிருக்கிறோம். அதில் வீரர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து விளையாடுகின்றனர். அவர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில தமாகா தொண்டரணித் தலைவர் அயோத்தி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT