

புதுக்கோட்டை: மாநில அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்காது. பிற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் நடைமுறைக்கு வரவில்லை. எனவேதான், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக அறிவாலயத்தில் உள்ள செங்கல்லைக் கூட தொடவோ, அறிவாலயத்துக்குள் நுழையவோ பாஜக தலைவர் அண்ணாமலையால் முடியாது. பொதுவான குற்றச் சம்பவங்களை தடுக்க முடியாது. ஆனால், குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறோம்.
நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மாநில அரசுடன், மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவெகவுக்கான வலைவீச்சா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வலிமையுள்ள ஒரே கட்சி திமுகதான். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினரின் களப்பணியால் தான் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். இதே களப்பணியை பாஜக உள்ளிட்ட சேர்த்து.வேறு எந்தக் கட்சியிலும் அவரால் செய்ய முடியாது.
பெண்களைப் பின்தொடர்ந்து சென்றாலே கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாமல் வீட்டுக்குள் பதுங்கியிருந்த பெண்கள், தற்போது தைரியமாக வெளியே வருகிறார்கள்.
மாநில அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காது. பிற மாநிலங்களில் கணக்கெடுத் திருந்தாலும் நடைமுறைக்கு வரவில்லை. எனவேதான். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.