

மயிலாடுதுறை: தமிழக பட்ஜெட்டில் 17 சதவீத நிதியை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முன்னோடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் 2021 முதல் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4 தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு 5-வது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தன்னிறைவு பசுமைக் கிராமங்கள் இயக்கத்தின் தேசியத் தலைவர் ஆறுபாதி ப.கல்யாணம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறிய தாவது:
நாட்டில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 16.7 சதவீதம், தெலங்கானாவில் 11.7 சதவீதம் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 6.1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனவே. தமிழக பொது பட்ஜெட்டில் நடப்பாண்டு வேளாண்மை, உழவர் நலத் துறைக்கு 17 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும்.
பல விஷயங்களில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் என்று கூறிக் கொள்ளும் தமிழக அரசு, வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து. முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும்.
வெறும் திட்டங்களை மட்டும் அறிவிப்பதால் பயனில்லை. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து எந்த வரையறையும் நிர்ணயிக்காமல். பயிர் செய்யும் அளவுக்கேற்ப விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தை அதிகரிக்க நாட்டுமாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தனி பட்ஜெட் என்று கூறிக்கொண்டு. மற்ற துறைகளில் செயல்படுத்தப்படும் வேளாண் சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியையும் சேர்த்து, வேளாண் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டுவதில் பலனில்லை.
கருத்துகேட்புக் கூட்டங்களில் கூறப்படும் கருத்துகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதிக திட்டங்களை அறிவித்தாலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. எல்லா திட்டங்களின் பயன்களும், அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் விதிகளை எளிமைப்படுத்த வேண்டும்.
காந்திய சுதேசி பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா 1948-ல் முன்வைத்த தற்சார்பு கிராமங்கள் திட்டத்தை நாங்கள் புத்தாக்கம் செய்து. தகவல் தொழில்நுட்பம் இணைந்த தன்னிறைவு பசுமைக் கிராமங்கள் திட்ட வரைவை மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி உள்ளோம். மாநில அரசுக்கும் அனுப்ப உள்ளோம். இதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் தலா 10 சதவீத பங்களிப்புடன். குறைந்தபட்சம் 20 சதவீதம் ஊக்கத்தொகை இணைந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ஆறுபாதி கல்யாணம் கூறினார்.