சென்னை: கல்லீரல் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நுண்துளை சிகிச்சை!

சென்னை: கல்லீரல் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நுண்துளை சிகிச்சை!
Updated on
1 min read

சென்னை: கல்லீரல் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நுண்துளை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த இளம்பெண் (27) கடந்த 4 மாதங்களாக வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்றும் குணமாகாததால் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கல்லீரலில் இருந்து வரும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், கல்லீரல் வீக்கம் அடைந்திருப்பதும், 50 சதவீதம் பழுதாகியுள்ளதும் சிடி ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோரது ஆலோசனை, வழிகாட்டுதலின்படி, இடையீட்டு கதிர்வீச்சு துறை (Intervention Radiology) மருத்துவர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நுண்துளை வழியாக பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டனர். ரத்தக் குழாயில் ‘ஸ்டென்ட்’ பொருத்தி அடைப்பை சரிசெய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

* மருத்துவர் பெரியகருப்பன்: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் அந்த பெண்ணின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. ஆனால், அதை எல்லோருக்கும் செய்ய முடியாது. இந்த நிலையில், திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல், நுண்துளை பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டு ஸ்டென்ட் வைத்து ரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இது அதிக ஆபத்து இல்லாத சிகிச்சை. அவர் நலமாக உள்ளார்.

பழுதடைந்த கல்லீரலும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பும். தனியார் மருத்துவமனையில் இதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதுவரை 18 நோயாளிகளுக்கு இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக உள்ளனர்.

* மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி: சிறப்பாக சிகிச்சை அளித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தால் ஏழை மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in