

சென்னை: மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில் இரு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அரசு நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் போட்டோஷூட், வீடியோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வருக்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம், ஆட்சி நடத்துவதில் இருக்கிறதா? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, இந்தக் கொலையை வாய் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என்று கூறுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னரே காவல் துறை தீர்ப்பை எழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா? எனவே, இளைஞர்கள் கொலைக்கான காரணத்தை தீர விசாரிப்பதுடன், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது. இது அந்தந்தப் பகுதி காவல் துறையினருக்கும் தெரியும். தற்போது சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தன்னைத்தானே புகழ்ந்து, தினமும் வீடியோ ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பாரா? தமிழகம் தற்போது 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக்காலத்தைவிட மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அரசின் திறமையின்மையால், அமைதியான பொதுமக்களை சமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதல்வர் உணர வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சாராய விற்பனையையும், இரு படுகொலைகளையும் தடுக்கத் தவறிய காவல் துறை, அதற்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, உண்மையை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. எந்த முன்விரோதமும் இல்லாமல், சாதாரண வாக்குவாதம் ஏற்பட்டதால் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் என்றால், அவர்களைக் கொலை செய்தவர்கள் எந்த நேரமும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தார்கள் என்று காவல்துறை கூறுகிறதா? புகார் அளித்தவர்களின் விவரங்களை கள்ளச் சாராய வணிகர்களிடம் தெரிவிப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறது காவல் துறை.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகம் முழவதும் தொடர்ந்து கள்ளச் சாராயத்தால் உயிரிழப்பும், கொலைகளும், பல்வேறு குற்றச் செயல்களும் தொடர்கின்றன. காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? கள்ளச் சாராய விற்பனையில் உளவுத் துறையின் பணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது வருத்தத்துக்குரியது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையை தடுத்தlend கொலையானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடக்கிறதா? சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவுக்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. திமுக அரசின் இத்தகைய மெத்தனப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படும் அவலம் நீடிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, சமூக விரோதிகளின் கூடாரமாத தமிழகம் மாறிவிட்டது.