

சென்னை: இந்திய சட்டக்கல்வி வரலாற்றில் முதல்முறையாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியரான ஏழுமலை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளியான பேராசிரியர் எஸ்.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய சட்டக் கல்வி வரலாற்றில் முதல்முறையாக மாற்றுத்திறன் கொண்ட பேராசிரியர் ஒருவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய அம்சமாகும். இதற்கான நியமன உத்தரவை தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.ஸ்ரீராம் பிறப்பித்துள்ளார்.
தற்போது தேர்வாகியுள்ள பேராசிரியர் ஏழுமலை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள மனித உரிமைகள் சட்டத் துறையின் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் 2021-ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறந்த பேராசிரியருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதேபோல், 2012-ம் ஆண்டு தமிழக முதல்வரிடம் இருந்தும் சிறந்த பேராசிரியருக்கான மாநில விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.