

சாம்சங் தொழிலாளர்கள் மீதான பணி நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததாக பரவிய தகவலால் காஞ்சிபுரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் சிஐடியு தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தப் போராட்த்தையொட்டி சாம்சங் தொழில் நிறுவன தொழிலாளர்களின் சங்கத்துக்கு தொழிலாளர் நலத்துறை அங்கீகாரம் அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சிஐடியு தொழிலாளர்கள் சிலர் இடைநீக்கம் செயய்யப்பட்டனர். அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொழிற் சங்கம் ஆரம்பித்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தச் செயலில் தொழில் நிறுவனம் ஈடுபடுவதாக சிஐடியு தொழிற் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சாம்சங் தொழில் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
தொழிலாளர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்தின்போது நேற்று ஒருவர் மயங்கி விழுந்ததாக திடீர் தகவல் பரவியது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளிநபர்கள் அனுமதி இல்லை என்பதால் பலருக்கு என்ன நடந்தது என்பது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, “போராடும் தொழிலாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வெயில் காரணமாக ஒருவருக்கு மட்டும் லேசான மயக்கம் ஏற்பட்டது. அவரை நிழற் பகுதிக்கு கொண்டு சென்றதும் சரியாகிவிட்டது. வேறு ஏதும் பிரச்சினை இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை கண்டித்து தொழிலாள்கள் குடும்பத்துடன் பிப். 17-ம் தேதி சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்த உள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும்” என்றார்.