Published : 15 Feb 2025 07:57 AM
Last Updated : 15 Feb 2025 07:57 AM
பட்டுக்கோட்டை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெற்றது. எம்எல்ஏ-வாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை அதிகாரத்துக்கு வந்தார். வராது வந்த மாமணியாய் தொகுதியில் உதயசூரியன் உதித்ததால் உடன்பிறப்புகள் உற்சாகமானார்கள்.
ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கை கைவிட்டதால் அண்ணாதுரை எம்எல்ஏ-வாக பொறுப்பேற்ற நாள் முதலே அவருக்கு எதிராக கழகத்துக்குள்ளேயே கலகக் குரல்கள் வெடித்தன.
ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கென ஒரு தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டார் அண்ணாதுரை. இந்த நிலையில் தான், தற்போது அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கிய திமுக தலைமை, ஒன்றிய துணைத் தலைவரான பழனிவேலை அந்தப் பொறுப்பில் அமர்த்தி இருக்கிறது.
அண்ணாதுரை நீக்கம் குறித்து பட்டுக்கோட்டை திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அத்தனை பேருமே குமுறித் தீர்த்தனர். “பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சை தெற்கு மாவட்டத்துக்குள் வருகின்றன. மாவட்டத்துக்கு கட்சி அலுவலகம் இருக்கிறது. ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு தனக்காக ஒரு கட்சி அலுவலகத்தை திறந்து கொண்டார் அண்ணாதுரை. இதனால் எந்த அலுவலகத்துக்குப் போவது என்று தெரியாமல் கட்சியினர் குழம்பிப் போனார்கள்.
அதிராம்பட்டினம் பகுதியில் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அண்ணாதுரை கட்சிப் பதவிகளை வழங்கினார். இதனால் அங்குள்ள பெரும்பாலான திமுக-வினரின் எதிர்ப்புக்கு ஆளானார். அந்த ஊருக்குள்ளேயே அவரால் செல்லமுடியவில்லை, மக்களவைத் தேர்தலின் போது, “அண்ணாதுரை எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்தால் நாங்கள் திமுக-வுக்கு எதிராக வாக்களிப்போம்” என செயல்வீரர்கள் கூட்டத்தில் பகிங்கரமாகவே திமுக-வினர் பேசினார். இதனால் அவர் அந்த பகுதிக்குச் செல்லாமல் தவிர்த்தார்.
அங்கு அண்ணா துரையை கண்டித்து திமுக-வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டினர். கட்சியில் உள்ள மற்றவர்கள் தலையிட்டுப் பேசியதால் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏரியில் திமுக-வினர் மண் எடுத்த விவகாரத்தில், தாசில்தார் மற்றும் டிஎஸ்பி-யை அண்ணாதுரை போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பிரச்சினையானது.
பட்டுக்கோட்டையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. நகருக்கு வெளியே போக்குவரத்துக்கு போதிய பாதை வசதி இல்லாத இடத்தில் இந்தப் பேருந்து நிலையத்தை கட்டவைத்ததே அண்ணாதுரைதான். ஏனென்றால் அந்தப் பகுதியில் அவருக்கு சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அவற்றின் மதிப்பை உயர்த்த இப்படி நடந்துகொண்டவர், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாஜககாரர் ஒருவருக்கு ஒதுக்கவும் காரணமாக இருந்தார் இது எல்லாவற்றுக்கும் மேலாக, பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் மாவட்டத் தலைநகரங்களி்ல் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால், பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லாத அண்ணாதுரை, தனது கட்சி அலுவலகத்தில் அண்ணாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். இவரது தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்த பலரும் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த விவகாரத்தை அப்போதே கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தினர்.
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் அண்ணாதுரையை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்வது சிரமம் என்பதாலேயே தலைமை அவரை பொறுப்பில் இருந்து தூக்கி இருக்கிறது. எங்களைக் கேட்டால் இதுவே லேட் தான்” என்றனர் பட்டுக்கோட்டை திமுக-வினர். இதற்கெல்லாம் அண்ணாதுரை என்ன பதில் சொல்கிறார் என்று கேட்க அவரது அலைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். அது தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT