கவரைப்பேட்டை அருகே சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு பாராட்டு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கவரைப்பேட்டையில் விபத்தின் போது சாதுர்யமாகச் செயல்பட்டு, பெரும் விபத்தைத் தவிர்த்த ரயில் ஓட்டுநர் சுப்பிரமணிக்கு ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி பாக்மதி அதிவிரைவு ரயில் சென்றது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்றபோது பிரதான பாதைக்குப் பதிலாக, லூப் லைன் எனப்படும் கிளைப் பாதையில் மாறி அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. 19 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்தி, ரயில்வே வாரியத்திடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து, ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ``பாக்மதி அதிவிரைவு ரயில் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கியபோது, அதன் ஓட்டுநர் சுப்பிரமணி துரிதமாகச் செயல்பட்டு அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தினார். இதனால், ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து சென்று, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரது பணி பாராட்டுக்குரியது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in