Published : 15 Feb 2025 05:14 AM
Last Updated : 15 Feb 2025 05:14 AM
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மேலும் ஒரு சான்று. இன்று முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்டின் மிகத் தொன்மையான ஆன்மிக வளம் கொண்ட காசியையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்கிறது. நிலப்பரப்பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை வளர்க்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ்சங்கமம் இந்த ஆண்டு 3-வதுகலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட இது, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வைக் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழகத்தின் உயிரோட்டமான வளமான பாரம்பரியம், வாராணசியின் காலத்தால் அழியாத மரபுகள் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க முனிவரான மகரிஷி அகத்தியரை இந்த 3-வது ஆண்டு நிகழ்வு நினைவுகூருகிறது. அயோத்தியில், ராமபிரானின் பிராணப்பிரதிஷ்டை செய்த பின், நடைபெறும் முதலாவது சங்கமம் என்பதும் மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதாலும் தனி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரம் பிரதிநிதிகளை அழைத்துவர அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்களும் இதில் இணைகின்றனர். இளைஞர்கள் பங்கேற்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதில் பங்கேற்போர் நடன நிகழ்வுகள், இசை, காசியையும் தமிழகத்தையும் சேர்ந்த அழகிய கலைக் கண்காட்சி ஆகியவற்றை கண்டுகளிப்பார்கள்.
மகாகவி பாரதியாரின் இல்லம் அமைந்துள்ள காசியின் அனுமன் படித்துறை புனித யாத்திரை தலமாக உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் பலவகையான வசதிகளை செய்து தருகிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி, ஒப்புமை இல்லாத அர்ப்பணிப்பை கொண்டுள்ளார். சிங்கப்பூரில் திருவள்ளுவர், கலாச்சார மையத்தை அமைத்தது, ஜகார்த்தா முருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் அவரது ஈடுபாடு இதனை மேலும் உறுதி செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது தேசத்தின் வரலாற்றில் அனைத்து மொழி, அனைத்து பாரம்பரியம், அனைத்து சமூகம் ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதை உறுதி செய்து அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரப் பாதையில், இந்தியா தொடர்ந்து நடைபோடுகிறது. காசி தமிழ் சங்கமம் 2025-ஐ நாம் கொண்டாடும் நிலையில், நமது பன்முகத்தன்மை, போற்றுதலுக்கு உரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காசி – தமிழகம் இடையேயான ஒற்றுமை பாரதத்தின் ஒற்றுமையாகும். இதனை இன்று மட்டுமல்ல, எப்போதும் கொண்டாடுவோம்.
-டாக்டர் எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை,
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT