Published : 15 Feb 2025 05:07 AM
Last Updated : 15 Feb 2025 05:07 AM
பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மத ரீதியிலான எந்தவொரு போராட்டங்களுக்கும் போலீஸார் ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் வகையில் சென்னையில் பிப்.18-ம் தேதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான எஸ்.யுவராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு தினங்களுக்கு முன்பாக இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.முத்தரசு, ‘‘இந்துக்களின் ஒற்றுமை மற்றும் உரிமையை நிலைநாட்டும் வகையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் அமைதியான முறையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவி்த்த மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜி்ன்னா, ‘‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா, கொடிமரம், மலைவழி்ப்பாதை, நெல்லித்தோப்பு தொடர்பாக ஏற்கெனவே பிரிவியூ கவுன்சில் வரை சென்று இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரும், வருவாய் கோட்டாட்சியரும் இருதரப்பிலும் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். முடிந்துபோன பிரச்சினையை மீண்டும் சென்னையில் எழுப்புவது என்பது சரியான நடைமுறை அல்ல. மனுதாரர் அனுமதி கோரியுள்ள தங்கசாலை வழித்தடம் மட்டுமின்றி, வேறு எந்த இடத்தை தேர்வு செய்து கூறினாலும் அதற்கும் அனுமதி அளிக்க கூடாது. மதுரையில் நிபந்தனைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தபோது மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் விரும்பத்தகாத பிரச்சினைகள் ஏற்பட்டு அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதுபோன்ற சம்பவம் சென்னையிலும் நடந்துவிடக்கூடாது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு வித்திடும் இதுபோன்ற பேரணிகளை நீதிமன்றமும் ஊக்குவிக்கக் கூடாது. எல்லோருடைய மத நம்பிக்கை, வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும்’’ என வாதிட்டிருந்தார்.
அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வேண்டும் என கூறி மனுதாரர் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோர முடியாது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நாட்டின் இறையாண்மை, மத நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் போராட்ட காரணத்துக்காக பயன்படுத்த முடியாது.
சென்னையில் வேல் யாத்திரை நடத்தினால் பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது பலம். எனவே, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மத ரீதியிலான எந்த பேரணி, யாத்திரை மற்றும் ஆர்ப்பட்டங்களுக்கும் போலீஸார் ஒருபோதும் அனுமதி அளிக்க கூடாது.
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதியளிக்க முடியாது. அதேநேரம் வழிபாடு தொடர்பான உரிமைக்கு தடையில்லை. இவ்வாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT