Last Updated : 14 Feb, 2025 07:07 PM

2  

Published : 14 Feb 2025 07:07 PM
Last Updated : 14 Feb 2025 07:07 PM

கடனை செலுத்திய பிறகும் சொத்து ஆவணங்களை வழங்க மறுத்த வங்கி அதிகாரிக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மதுரை: தொழில் கடனை முழுமையாகச் செலுத்திய பிறகும், அடமான சொத்து ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கியின் தலைமை மேலாளரை நேரில் அழைத்துக் கண்டித்து, அபராதம் விதித்ததுடன், ஏழை மக்களை வங்கிகள் துன்புறுத்தக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மாரித்துரை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் தொழில் செய்வதற்காகக் கரூர் வைசியா வங்கியில் ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 523 கடன் பெற்றேன். கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை முறையாகச் செலுத்தி வந்தேன். கரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை முறையாகச் செலுத்த முடியாமல் போனது.

இதனால் கடனுக்காக வங்கியில் அடமானமாக வைத்த சொத்தை ஜப்தி செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் 2022 அக்டோபர் 20-க்குள் ரூ. 7 லட்சமும், எஞ்சிய கடன் தொகையை 4 தவணைகளாகச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி 2023 பிப்ரவரி 16-க்கும் மொத்த கடனையும் செலுத்திவிட்டேன்.

பின்னர் வங்கியை அணுகி சொத்து அடமான ஆவணங்களைத் தருமாறு கேட்டேன். அதற்கு மேலும் கூடுதலாகப் பணம் செலுத்தினால் தான் ஆவணங்களைத் திரும்ப வழங்குவோம் என்றனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய கடன் தொகையை முழுமையாகச் செலுத்திய பிறகும் சொத்து ஆவணங்களை வழங்க மறுப்பது சட்டவிரோதம். எனவே எனது சொத்து ஆவணங்களைத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிடுகையில், மனுதாரர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் கடன் தொகையைத் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி முழு பணமும் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூடுதலாக ரூ.5 லட்சம் செலுத்தினால் தான் ஆவணங்களை வழங்க முடியும் என வங்கி உத்தரவிட்டுள்ளது என்று கூறி வங்கி உத்தரவு நகலைத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, வங்கியின் தலைமை மேலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீநாத்குமார் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் மனுதாரருக்கு அடமான செத்து ஆவணங்களை எப்போது வழங்க முடியும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பிப்.17-ல் ஆவணங்கள் வழங்கப்படும் என வங்கி தலைமை மேலாளர் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, வங்கிகள் ஏழை மக்களைத் துன்புறுத்தக் கூடாது. மனுதாரரிடம் இருந்து அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும் வங்கி தலைமை மேலாளர் பிப்.17-ல் காலை 11 மணிக்கு மனுதாரரின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும். ஆவணங்களுடன் கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான தடையில்லா சான்றும் வழங்க வேண்டும்.

அடுத்த 2 நாளில் சொத்தை வங்கியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சொத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரை நீதிமன்றத்துக்கு அலையவிட்டதற்காகக் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ஆவணங்களை வழங்கும் போது மனுதாரரிடம் வழங்க வேண்டும். வங்கிகள் ஏழை மக்களைத் துன்புறுத்தக்கூடாது என அதனை ஆவணங்களை ஒப்படைக்கும் அன்றே மனுதாரரிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x