

உடுமலை: பாதை வசதி கோரி மலைவாழ் மக்கள் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு, குருமலை, மேல் குருமலை, குழிபட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் அங்கு மக்களுக்கு தேவையான சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இது வரை செய்து தரப்படவில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை வரை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தளி பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக திருமூர்த்தி மலையில் உள்ள வருவாய் மற்றும் பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட இடத்தில் சாலை அமைப்பதற்கான பணிகள் மலைவாழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. வனத்துறை எல்லையில் பணிகளை தொடர உரிய அனுமதி இல்லாததால் வனத்துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் வனத்துறையை கண்டித்து இன்று மலைவாழ் உடுமலையில் உள்ள மக்கள் மாவட்ட வன அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினமே இத்தகவல் தெரியவந்ததையடுத்து வனத்துறையினர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டி மலைவாழ் மக்கள் உள்ளே வரமுடியாதபடி தடுத்தனர். போலீஸாரும் அங்குள்ள சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நுழைவு வாயிலின் முன்பே சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அங்கேயே தேநீர் மற்றும் மதிய உணவு சமைத்து விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குமார் முன்னிலையில் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்டு கம்யூ. கட்சி நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் நகர செயலாளர் பாலதண்டபாணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ், விதொச சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைவாழ் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.