“அதிமுகவில் இணைய விரும்பினால்...” - ஓபிஎஸ்ஸுக்கு ராஜன் செல்லப்பா விதித்த நிபந்தனை

வி.வி.ராஜன் செல்லப்பா | கோப்புப்படம்
வி.வி.ராஜன் செல்லப்பா | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: “அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் 6 மாதம் காலம் அமைதியாக இருக்க வேண்டும்,” என்று வி.வி.ராஜன் செல்லப்பா நிபந்தனை விதித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடந்தது. திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவுக்கு வலிமையான எதிர்காலம் உள்ளது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் அதிமுக-வின் வாக்குவங்கி அதிகரித்துள்ளது. மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. அதிமுக புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் வலியான எதிர்காலம் உள்ளது,” என்றார்.

அதிமுகவில் எவ்வித நிபந்தனையுமின்றி இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு நன்றாக இருந்திருந்தால் பாஜக அவரை கட்சியில் இணைத்து இருக்கும். அக்கட்சியை நம்பிச் சென்ற அவர் தற்போது செல்வாக்கை இழந்துள்ளார். ஆறு மாத காலம் அதிமுக-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நாங்கள் பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.

மேலும், அதிமுக-வுக்கு எதிராக வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. கட்சி நலனில் அக்கறை உள்ள மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல.” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in