

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் 62 வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் 14-ஆம் தேதிக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் 14ஆம் தேதி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும் என வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும், வீட்டின் முகப்புகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இன்று 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குவிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க ஏதுவாக மின்வாரிய அதிகாரிகளும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உள்ளாட்சி துறை ஊழியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்துள்ளதை அறிந்த கிராம மக்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஊர் எல்லையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் வீடுகளை அகற்ற முயன்றனர். அப்போது ஒரு வீட்டின் முகப்பு பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடைவிதித்தது. இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.