Published : 14 Feb 2025 05:55 AM
Last Updated : 14 Feb 2025 05:55 AM

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: போக்குவரத்து இணை ஆணையர் பணியிடை நீக்கம்

மகேஷ் குமார்

சென்னை: பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். தமிழக அரசு நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்தவர். பின்னர், ஐபிஎஸ் ஆக அந்தஸ்து பெற்றார். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்கள் 2 பேர் டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.

ஒரு பெண் காவலர் அளித்த புகாரில், ‘இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறார். மேலும், இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். வாட்ஸ்அப் காலில் அழைத்து அடிக்கடி அத்து மீறுகிறார், தனிமையில் இருக்க அழைக்கிறார்’ என தெரிவித்து இருந்தார்.

மற்றொரு பெண் காவலர் அளித்த புகாரில், ‘இணை ஆணையர் மகேஷ்குமார் இரவு ரோந்து கண்காணிப்பு என்ற பெயரில், இரவு நேரத்தில் பணியில் இருந்த என்னிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். ஆசைக்கு இணங்க மறுத்தால், பணியிடை நீக்கம் செய்வேன் என மிரட்டுகிறார். மேலும், அவரது அலுவலகத்திலேயே என்னை பணியமர்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்’ என்று தெரிவித்திருந்தார்.

இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து, காவல் துறையில் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான ‘விசாகா கமிட்டி’ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் விசாகா கமிட்டி, 2 பெண் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும், போன் அழைப்பு, வாட்ஸ்அப் தகவல் உள்பட பல்வேறு டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், விசாரணை அறிக்கையை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அளித்தனர். அந்த அறிக்கையில், பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியில் இணை ஆணையர் மகேஷ்குமார் அத்துமீறி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான இணை ஆணையர் மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, மகேஷ் குமாருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x