Published : 14 Feb 2025 05:47 AM
Last Updated : 14 Feb 2025 05:47 AM
திருத்தணி: திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மகாத்மா காந்தி சிலையை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பேருந்து நிலையம் அருகே மபொசி சாலையில் கடந்த 1949-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நேற்று அதிகாலை திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி நிர்வாகத் துறையினர், நவீன கருவிகள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலையை அகற்றினர். தொடர்ந்து, மணி மண்டபமும் அகற்றப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தியின் சிலையை அகற்றியிருப்பது அனைவரையும் வேதனை அடைய செய்திருக்கிறது. எனவே மகாத்மா காந்தியின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள மார்க்கெட்டில் சிலையை தமிழக அரசே திறக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT