நிலுவை தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வேண்டும்: பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, கூடுதல் செயலர் எஸ்.கார்மேகம், கூட்டுநர் த.பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் கி.நடராஜன், நெல்லை ஆ.தர்மன், அ.சவுந்தரராஜன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு உள்ளிட்ட 13 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைத்து சங்கங்களையும் ஒரு சேர அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொழிற்சங்கத்தினர் கருப்பு துணி கட்டி பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து செய்தியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அ.சவுந்தரராஜன் (சிஐடியு): 1.9.2003-ல் இருந்து நிலுவைத் தொகை, ஊதிய உயர்வுடன் கூடிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். பிற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும்போதே பணப்பலன் வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். ஊழியர் நியமனம், வாரிசு வேலை, ஒப்பந்தத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிடுதல், பழைய ஓய்வூதியத் திட்டம், கடந்த ஆட்சியில் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.
கி.நடராஜன் (தொமுச): 2005-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு சங்கத்துடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது, எந்த சங்கத்தையும் ஒதுக்கவில்லை. மினி பேருந்தை பொருத்தவரை அச்சப்படத் தேவையில்லை, தனியார் மய நடவடிக்கை இல்லை என அமைச்சர் உத்தரவாதம் அளித்திருக்கிறார். தனியார்மய நடவடிக்கை எனும் பட்சத்தில் தொமுச கருத்தை பதிவு செய்யும். டெண்டர் எல்லாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய போக்குவரத்துக் கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டாம் என்கிறோம்.
ஆர்.கமலகண்ணன் (அண்ணா தொழிற்சங்கம்): சமூக நீதி பேசும் அரசு, 70 சதவீத சங்கங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ளவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை கண்டிக்கிறோம். அடுத்த முறை அனைத்து சங்கங்களும் ஒருசேர பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் 2.44 காரணி உயர்த்தப்பட்டதை போல, உடன்பாடு ஏற்பட வேண்டும். அதன்படி, 25 சதவீத உயர்வு கோரியுள்ளோம். ஊழியர் பிரச்சினையை பேச முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் மீதமுள்ள 73 சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.
