Published : 14 Feb 2025 12:27 AM
Last Updated : 14 Feb 2025 12:27 AM

துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார் கருத்து

கோப்புப் படம்

‘துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைக்க முடியாது’ என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதா, பல்வேறு சோதனைகளைத் தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியதுடன், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். தற்போது அதிமுகவுக்கு கிடைத்துள்ள இறையருள் பழனிசாமி. ஜெயலலிதா சந்தித்த சோதனைகளைப்போல அவரும் பல சோதனைகளை சந்தித்து, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கியுள்ளார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7.5 சகவீத இடஒதுக்கீடு, 2,000 அம்மா மினி கிளினிக், 6 புதிய மாவட்டங்கள், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு, முல்லை பெரியாறு தீர்ப்பை நடைமுறைப்படுத்தியது என பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை செயல்படுத்தியுள்ளார் பழனிசாமி. முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல, மக்கள் சேவைக்கான பதவி என்று புதிய இலக்கணத்தை படைத்தார்.

தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்க முடியாது. இதனால் அதிமுகவுக்கு எந்த சேதாரமும் இல்லை. இது மக்களால் பாதுகாக்கப்படுகிற கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x