“அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது” - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
Updated on
2 min read

தேனி: “சாதாரண தொண்டனாக இருந்த என்னை அரசியலில் உச்சத்துக்கு கொண்டு சென்றது அதிமுகதான். அதனால்தான் அக்கட்சியை ஒருங்கிணைத்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு விதை போட்டவர் ஜெயலலிதாதான். ஆனால் இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் இவ்விழாவில் எம்ஜிஆர்.ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் இல்லாமல் தனக்கு பாராட்டு விழா வைத்துக்கொண்டார். இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்து அவர்தான் பதில் கூற வேண்டும். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன்தான். அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது பல தேர்தல்களில் நானும், அவரும் இணைந்து வேலை பார்த்தோம்.

50 ஆண்டு காலம் இரு தலைவர்கள் உருவாக்கிய விதிமுறைகளை திருத்தம் செய்து பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். அதிமுகவுக்கு கிடைத்த இறையருள் பழனிசாமி என்று ஆர்பி.உதயகுமார் கூறியுள்ளார். உதயகுமார் கருத்துக்கு எப்போதுமே நான் பதில் கூற மாட்டேன். அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது. நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த நிபந்தனையும் இன்றி தயாராக இருக்கிறோம். பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

தான் மறைந்தாலும் பல நூறு ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்யும் என்று ஜெயலலிதா கூறினார். அவரின் கூற்றை உண்மையாக்குவோம். வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் நான் உட்பட அனைவருக்கும் தாழ்வுதான். ஒருவேளை அதிமுக ஒருங்கிணைந்தால் பாஜக உடன் கூட்டணி வைப்பது நல்லது. தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பது சிறந்ததுதான் என்பது எனது ஆலோசனை.

மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது. நாம் பாராட்டுவதில் தவறில்லை. தமிழ்நாடு மக்கள் எதை விரும்புகிறார்களே அதை ஒருங்கிணைந்த அதிமுகவால் கொடுக்க முடியும். அனைவரும் அதிமுகவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமித்ஷாவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றோர் கட்சியை வளர்க்க அவரவர் கோணத்தில் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்கு நான் எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும்.

தமிழர் நலன், பாரம்பரியம் , சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிற விதம் ஆகியவற்றை பார்த்துத்தான் நடிகர் விஜய்க்கு மக்கள் வாக்களிப்பர். அதனடிப்படையிலே அவரது வெற்றி, தோல்வி அமையும். பெரியார் குறித்து சீமானின் விமர்சனத்துக்கு நான் கண்டனம் தெரிவித்து இருக்கிறேன். இதைகடந்து அவரை கடித்து குதறவா முடியும். பெரியார் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திருக்கிறார். கீழ்தட்டு மக்கள் உயர்நிலைக்குச் செல்வதற்கு பெரியார் முக்கிய காரணம். கடவுள் மறுப்பு ஒன்றைத் தவிர ஜெயலலிதாவும் பெரியாரை பல விஷயங்களில் பின்பற்றினார்.

பெரியார் கருத்திற்கு வலு ஊட்டியவர் ஜெயலலிதா. அதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஒற்றை தலைமை ஏற்றால் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர். உண்மையான தொண்டர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளனர். இதை உணர்ந்து ஒன்று சேர்ந்திருந்தால் இன்றைக்கு அதிமுக ஆளும்கட்சியாக இருந்திருக்கும்.

கட்சி தொடங்குவதோ, வேறு கட்சிக்கு செல்வதோ முக்கியம் அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிமுகவை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆர்.பி உதயகுமார் ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினார். ஆனால் என்ன நடந்தது... அதிமுக டெபாசிட் கூட வாங்கவில்லை.

இருந்தாலும் அதிமுகவின் இந்நிலை வருத்தமாகத்தான் உள்ளது. சாதாரண தொண்டனாக இருந்த என்னை அதிமுகதான் அரசியலின் உச்சத்துக்குகொண்டு சென்றது. அந்த வகையில் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவை நினைத்து கவலையாக உள்ளது. ஆகவே கட்சியை ஒருங்கிணைக்க தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in