மீனவர்கள் பிரச்சினை: மத்திய இணை அமைச்சரிடம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் நேரில் மனு

மீனவர்கள் பிரச்சினை: மத்திய இணை அமைச்சரிடம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் நேரில் மனு

Published on

புதுச்சேரி: டெல்லியில் மத்திய இணை அமைச்சரைச் சந்தித்து மீனவர்களை இலங்கையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் மாநில தலைவர் எம்.பி வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினர்.

புதுச்சேரியின் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் புதுடெல்லிக்குச் சென்று, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கை நேரில் சந்தித்தனர். புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சார்ந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது ஏற்படும் சிரமங்களையும், கைது நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சமீபத்தில் இலங்கை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலையில் உள்ள தமிழக மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சார்ந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கைது நடவடிக்கையின்போது இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்ற தகவல் காரணமாகக் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள மீனவர்களிடையே ஓர் அசாதாரணமான சூழல் நிலவி அவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் மத்திய இணை அமைச்சரிடம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதுவரை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளைத் திரும்பப் பெற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in