சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக பணிகளைப் பட்டியலிட்டு செல்வப்பெருந்தகைக்கு அன்புமணி கடிதம்

அன்புமணி ராமதாஸ் மற்றும் செல்வப்பெருந்தகை
அன்புமணி ராமதாஸ் மற்றும் செல்வப்பெருந்தகை
Updated on
2 min read

சென்னை: “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் பாமகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான ஒற்றுமையை புரிந்து கொண்டு தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை பாமக இன்றோ, நேற்றோ எழுப்பவில்லை. 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை தொடங்கிய நாளில் இருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாத சூழலிலேயே இந்தக் கோரிக்கையை ராமதாஸ் முன்வைத்தார்.கடந்த 1980-ம் ஆண்டு துவங்கி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாநாடு, பரப்புரை, பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியது. 1987-ல் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க பாமக அனுபவித்த கொடுமைகள் ஏராளம், என்று சாதிவாரி கணக்கெடுப்புக்காக பாமக சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக பாமக நிறுவனரும், நானும் பாமக-வும் எண்ணிலடங்காத பணிகளை செய்திருக்கும் நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பாமக என்ன செய்தது? இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்கிறார் என்று நீங்கள் கூறுவதெல்லாம் பாமகவின் உன்னதமான சமூகநீதி பணிகளை கொச்சைப்படுத்துவது ஆகும்.

தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும். மாநிலங்களில் மாநில அரசுகள் 2008-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மனநிலையும் இத்தகையதாகவே இருக்கிறது. இதற்காகத் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் பாமகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான ஒற்றுமையை புரிந்து கொண்டு தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

பாமகவின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதால் அதை ஏற்று தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். தமிழகத்தில் சமூகநீதியைக் காப்பதற்காக பாமக மேற்கொள்ளும் உன்னத முயற்சிக்கு துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in