“அறிவாலயத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அமைச்சர் சேகர்பாபு மற்றும் அண்ணாமலை
அமைச்சர் சேகர்பாபு மற்றும் அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: “திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி அதன் செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்.” என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்காமல் விடமாட்டேன்” என்று பேசியிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் கடந்தகால வரலாறு. எப்போதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ, எப்போதெல்லாம் திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ, அப்படி கூறுபவர்களின் அழிவுக்கான தொடக்கப்புள்ளிதான் அது என்பது பொருள்.

திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களுடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் திமுக-வை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள்.

2026-ம் ஆண்டு நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக அண்ணாமலை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்ய திமுக-வின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து , தமிழக முதல்வர் அண்ணாமலையை மண்ணைக் கவ்வச் செய்வார்.” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in