“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக இபிஎஸ் இருக்கிறார்” - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

ஆர்.பி.உதயகுமார் | கோப்புப் படம்.
ஆர்.பி.உதயகுமார் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: “மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு, எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “எதிரிகள், துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அது அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது.

ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடும், உழைக்கும் இயக்கம். மக்காளால் நான் மக்களுக்காவே நான். உங்களால் நான் உங்களுக்காக நான். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இனி இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மக்கள் சக்திதான் மகத்தான சக்தி. மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். களத்துக்குச் சென்று, மக்களை, இளைஞர்களை, மாணவர்களை மற்றும் விவசாயிகளை சந்திப்போம். களத்தில் அவர்களை சந்தித்து உண்மையை, சத்தியத்தை எடுத்துச் சொல்வோம். அதிமுகவுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில், மலரச் செய்ய உழைத்துக் கொண்டிருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. இது சோதனைக் காலம் என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மூலம் செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் மறைமுக பதிலடி கொடுத்துள்ளாரா என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in