

புதுச்சேரி: புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (பிப்.12) காலை கூடியது. புதுவை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வந்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், ஆகியோர் சட்டப்பேரவைக்குள் செல்லாமல், நுழைவு வாயில் முன்பு படிக்கட்டுகளில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “வேண்டாம், வேண்டாம், புதுவைக்கு மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம். புதுவை மக்களை பாதிக்கும் மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம். புதுவை மக்களை மதுபான தொழிற்சாலைகளில் இருந்து காப்பாற்று” எனக் கூறி கோஷங்களை எழுப்பினர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி தந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏ-க்களும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் கூறுகையில், “புதுவை மாநிலத்தில் மக்களை பாதிக்கும் 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளனர். இதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெற உள்ளனர்.
ஆளும்கட்சியாக இருந்தாலும், புதுவை மக்களை பாதிக்கும் குடிநீர் ஆதாரத்தை நிர்மூலமாக்கும் மதுபான ஆலைகள் புதுவைக்கு தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. புதுவைக்கு மதுபான ஆலைகள் வரக்கூடாது. மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிராக நாங்கள் எங்களது கண்டனத்தை தெரிவிக்கிறோம். டெல்லியில் மதுபான ஆலை ஊழல் வழக்கில் அப்போதைய முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுபோன்ற நிலை புதுவைக்கு வரக்கூடாது. ஆளுநர், முதல்வர், அமைச்சரிடம் மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்துள்ளோம். பாஜவில் 6 எம்.எல்.ஏ-க்கள் உள்ளோம். அமைச்சர் சாய்சரவணக்குமார் மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். எனவே பாஜகவில் மெஜாரிட்டியாக உள்ள 4 எம்.எல்.ஏ-க்கள் மதுபான ஆலைக்கு எதிராக உள்ளோம். பாஜகவில் பிரிவினை இல்லை. மதுபான கொள்கையைத்தான் எதிர்க்கிறோம்,” என்றனர்.
பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சைகள் போராட்டம் தொடர்பாக பாஜக சட்டமன்ற கட்சித்தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “போராட்டம் உள்நோக்கம் கொண்டது. இதுபற்றி பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.