Published : 12 Feb 2025 03:54 PM
Last Updated : 12 Feb 2025 03:54 PM
சென்னை: தைப்பூச திருவிழா சமயத்தில் பழநியில் பஞ்சாமிர்த பிரசாதமும் மற்ற கோயில்களில் நெய்வேத்திய பிரசாதமும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள இந்து முன்னணி, பக்தர்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய இந்து சமய அறநிலைத் துறையும் தமிழக அரசும் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா தைப்பூசம். இத்திருவிருவிழாவுக்கு இந்துக்கள் நேர்த்திக் கடன் செலுத்த விரதமிருந்து, வேல்குத்தி, காவடி சுமந்து பாதயாத்திரையாக நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலய தலங்களில், முருகனின் சன்னதி இருக்கின்ற கோயில்களில் கோடிக்கணக்கான மக்கள் தைப்பூசதன்று வழிபாடு செய்தனர். பழநியில் மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இதேபோல திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, சென்னிமலை, மருதமலை, வடபழனி முருகன் கோயில், முத்துமலை மற்றும் பலமுருகன் கோயில்களில் முருக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோயிலுக்கு வந்து தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
வரும் பக்தர்களிடம் உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை, அர்ச்சனை, வாகன நிறுத்தம், சிறப்பு கட்டண பேருந்து ஆகியவை மூலம் இந்து சமய அறநிலைத் துறை பல கோடிகள் வருமானத்தை மட்டும் ஈட்டியது. ஏழை, எளிய முருக பக்தர்களிடம் சிறப்பு பேருந்து கட்டணம் என நடந்த கட்டண கொள்ளை முருக பக்தர்களை மிகப் பெரிய அளவில் பாதிப்படைய செய்தது.
இவ்வாறு வருமானத்தை ஈட்டிய இந்து சமய அறநிலையத் துறையும், தமிழக அரசும் பாதயாத்திரை செல்லும் வழியிலும் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்களுக்கும் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற சாதாரண வசதிகளையும் கூட செய்து தரவில்லை. தொடர்ந்து திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது.
பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என்று இந்த அரசு நினைக்கின்றது. அதன் காரணமாகவே பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறதோ என்கின்ற சந்தேகம் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கட்டணமின்றி செய்யக் கூடிய அடிப்படை வசதிகளை செய்ய தவறியதோடு பக்தர்கள் பணம் கொடுத்து வாங்கும் பஞ்சாமிர்த பிரசாதம் கூட தட்டுப்பாடு காரணத்தினால் பழநி மற்றும் அறுபடை வீடுகளில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பல கோடி பேர் கோயிலுக்கு வருவார்கள் என்று திருக்கோயில் தேவஸ்தானத்துக்கும் தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரியும். அவர்களுக்கு தேவையான அளவு பிரசாதம் தயார் செய்து வைக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்த காரணத்தினால் பழநியில் பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை மற்ற கோயில்களில் நெய்வேத்திய பிரசாதம் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் இந்து சமய அறநிலையத் துறைக்கு மிகப்பெரிய இழுக்கு ஆகும். இது போன்ற நிர்வாக திறமையற்ற இந்து சமய அறநிலையத் துறை இந்து கோயிலை விட்டு வெளியேறுவதே இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.
பக்தர்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நேராமல் இருக்கவும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாக்கவும் சுதந்திர வாரியம் அமைப்பதே தீர்வாக அமையும். எனவே அறநிலையத் துறை ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT