‘மத்திய அரசு வஞ்சிக்கிறது’ - புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். வெளிநடப்பு

கோப்புப் படம் | புதுச்சேரி சட்டமன்றம்
கோப்புப் படம் | புதுச்சேரி சட்டமன்றம்
Updated on
1 min read

புதுச்சேரி: மத்திய அரசு வஞ்சிப்பதாகக்கூறி புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்குப் பேரவைத்தலைவர் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், “மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது. நிதி கமிஷனில் புதுவையைச் சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுவைக்குக் கூடுதல் நிதி வழங்கவில்லை.

ரயில்வே, துறைமுக விரிவாக்கத் திட்டங்கள் இடம்பெறவில்லை. நாட்டிலேயே பெஞ்சல் புயலால் புதுவைதான் அதிகளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது. தமிழகத்தை போல மாற்று ஆட்சி இருந்தாலும், வஞ்சிப்பதில் அர்த்தம் இருக்கும். இதனால் மத்திய அரசு புதுவையை வஞ்சிப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்றார்.

அப்போது பேரவைத்தலைவர் செல்வம், “பெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது” என்றார். அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து, “மத்திய அரசு புதுவைக்குத் தேவையான நிதியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் புதுவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் தவறாகக் குற்றம் சாட்டுகின்றனர்." என்றார்.

அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய்சரவணக்குமார், பாஜக எமஎல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர். இதற்கு எதிராக திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசினர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in