பாலியல் வன்கொடுமைகள் | திமுக அரசைக் கண்டித்து பிப்.18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகள் | திமுக அரசைக் கண்டித்து பிப்.18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: “பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில், பிப்.18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.அந்த வகையில், திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக, எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் ஒருசிலவற்றை மக்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அதிமுக மாணவர் அணியின் சார்பில், பிப்.18ம் தேதி, செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும், மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவர் அணியினர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in