Published : 12 Feb 2025 12:03 PM
Last Updated : 12 Feb 2025 12:03 PM
வேடசந்தூர்: ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி அன்று, நிலாப்பெண்ணாக சிறுமியை தேர்வு செய்து இரவு முழுவதும் பெண்கள் மட்டும் பங்கேற்று வழிபடும் பாரம்பரிய திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கோட்டூர் கிராமத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளான்று இரவில் நிலாப்பெண் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வழிபாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கிராமத்தில் வசிக்கும், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதி குலுக்கள் முறையில், ஒரு சிறுமி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு கிராமமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கோயிலில் வைத்து சிறுமிக்கு வழங்குவர். இந்த ஆண்டு நிலாப்பெண்ணாக கோட்டூர் அருகே தலையூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்- தமிழ்செல்வி தம்பதியின் மகள் தீக்ஷா(13) தேர்வு செய்யப்பட்டார். இவர், எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
தை மாதம் பவுர்ணமி முழுநிலவு நாளான நேற்று இரவு (செவ்வாய்கிழமை இரவு பிப்.,11) சிறுமிக்கு புத்தாடை அணிவித்து ஆவாரம்பூக்கள் மாலையிட்டு அலங்கரித்து, தலையில் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமக்க செய்து சிறுமியை ஊருக்கு வெளியே உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துவந்தனர்.
அங்கு சிறுமியை அமரவைத்து இரவு முழுவதும் கும்மியடித்து நிலா பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். விடிவதற்கு முன்பு கோயில் வளாகத்தில் பெண்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அதிகாலையில், சிறுமியை அழைத்துச்சென்று அருகேயிருந்த நீர்நிலையில் தீபம் ஏற்றச்செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில்,எங்கள் கிராமத்தில் உள்ள சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து தை பவுர்ணமி நாளில் வழிபாடு நடத்துவது என்பது தொன்று தொட்டு வருகிறது. எங்கள் முன்னோர் சொல்லிச்சென்ற பாதையில் இந்த விழாவை நடத்திச்செல்கிறோம். இந்த பாரம்பரிய வழிபாட்டுமுறையை அடுத்தடுத்து தலைமுறைகளுக்கும் கடத்துகிறோம். சிறுமியை நிலாப்பெண்ணாக பாவித்து வழிபடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும், கிராமமக்கள் நோய்நொடியின்றி ஆரோக்கிய வாழ்க்கை என வளம் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT