Published : 12 Feb 2025 07:18 AM
Last Updated : 12 Feb 2025 07:18 AM

விஜய் கட்சி நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை: தவெகவுக்கு வியூகங்கள் வகுக்க ஒப்பந்தம்?

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைமை நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். இதில் தவெகவுக்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் கட்சிக்கு தேர்தல் வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரமாக தேர்தல் வியூகங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவே அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடனும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, பிரசாந்த் கிஷோரை அதிமுக தரப்பில் அணுகிய நிலையில், அவரே 'யார் அந்த சார்' என்னும் வியூகத்தை முன்வைத்து திமுகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசனை வழங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் இதேபோல் அவ்வப்போது ஆலோசனைகளை மட்டும் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் தவெகவுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் பழனிசாமியையும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், பிரசாந்த் கிஷோருடன் தவெகவின் தலைமை நிர்வாகிகள் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். அதன்படி, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில், தவெகவுக்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும் என்பது குறித்து கலந்தாய்வு செய்தனர். அப்போது, அண்மையில் பிரசாந்த் கிஷோர் தரப்பில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி முக்கிய புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதில் இடம்பெற்ற விவரங்கள்: 15 முதல் 20 சதவீத வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும். தமிழகத்தில் தவெகவுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் இடங்கள். கட்சிக்கு வாக்களிக்க எந்த வயதினர் தயாராக இருக்கின்றனர். அடுத்து வரும் 11 மாதங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

ஒரு வீட்டுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அவர் வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரசாந்த் கிஷோருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர் வழங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய்யிடம் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் அளித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் அணி: இதற்கிடையே, தவெகவின் அணிகள் தொடர்பான அறிவிப்பும் நேற்றைய தினம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணிகளாக 28 அணிகள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, உறுப்பினர் சேர்க்கை அணி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகளின் பொறுப்பாளர்களுடைய பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x