Published : 12 Feb 2025 07:14 AM
Last Updated : 12 Feb 2025 07:14 AM
வேல் ஏந்தி காத்தருளும் தமிழ் கடவுள் முருகனின் அருள், ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும் என தைப்பூசத் திருநாளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். இந்நாள் நம் வாழ்வில் அமைதியையும், நேர்மறையையும் கொண்டு வரட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: தைப்பூச திருநாளில் தமிழக மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முருகனின் தெய்வீக அருள் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல் ஆரோக்கியத்தை ஒளிரச்செய்யட்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: விஷேசமிக்க தைப்பூசத் திருநாளில் உலகமெங்கும் உள்ள தமிழக சகோதர, சகோதரிகளுக்கு முருகனின் நிரந்தர ஆசி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். முருகப் பெருமான் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்யும் நமது தேசிய நோக்கத்துக்கான பாதையை ஒளிரச் செய்வாராக.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: வேலை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல வேலையை அருள்வான் முருகன். பன்னிரு கைகளால் நம்மை காக்கும் முருகனின் தைப்பூச திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகனின் பூரண அருளை வேண்டி வழிபடுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காட்டுக்குள் நடமாடி, நாட்டுக்குள் முடிசூடி, மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் முருகனின் அருள் பெற்று, அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ முருகனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: முருகனின் அருளால் தமிழக மக்கள் அனைவரது வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகவும், அனைத்து வளங்களும் கிடைக்கவும் தைப்பூசத் திருநாளில் வேண்டிக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளான தைப்பூசத் திருவிழாவில், தமிழர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஆன்மிகப் பணி தொடர்ந்து சிறந்து விளங்க தைப்பூசத் திருநாளில் இறைவனை வணங்கி வேண்டுகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆன்மீக அற்புதங்கள் நிறைந்த இந்நாளில் முருகனின் அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன். தமிழ் இறைவன் முருகப் பெருமானின் திருப்புகழை போற்றுவோம்.
தவெக தலைவர் விஜய்: தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ் நிலக் கடவுள். உலகமெங்கும் வாழும் தமிழர்களின் தனிபெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் தைப்பூசத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT