Published : 12 Feb 2025 12:56 AM
Last Updated : 12 Feb 2025 12:56 AM

முதல்வர் மருந்தகங்கள் தொடங்க 840 பேருக்கு உரிமம்: தொழில் முனைவோருக்கு மானியம், கடனுதவி வழங்கவும் திட்டம்

தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்று கொள்ளப்படுகிறது.

இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் இருந்தால், அதற்கான சான்றிதழ்களாக சொத்துவரி ரசீது அல்லது குடிநீர்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும், தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து தரப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சதுக்கு மருந்துகள் வழங்கப்படும். இவைதவிர விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x