Published : 12 Feb 2025 12:46 AM
Last Updated : 12 Feb 2025 12:46 AM

பொங்கல் வேட்டி, சேலை கொள்முதலில் ஊழல்: தரமான நூல் பெறப்பட்டதா என அண்ணாமலை மீண்டும் கேள்வி

பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தில், தரமற்றவை என நிராகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு இணையான தரமான வேட்டிகள் பெறப்பட்டதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

பொங்கல் வேட்டி, சேலை திட்டம் தொடர்பான தனது குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து கைத்தறித்துறை அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்து அண்ணாமலை விடுத்த அறிக்கை:

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதை, தமிழக பாஜக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது, பதிலேதும் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, இந்த ஆண்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் நான்கைந்து பக்கங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார். அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இத்தனை தரப் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுப்பப்படும் நூலில் நெய்யப்பட்ட வேட்டிகளில், எப்படி சுமார் 20 லட்சம் வேட்டிகள் 65 சதவீதத்துக்கும் அதிகமான அளவு பாலியஸ்டர் கலந்திருப்பதாக நிராகரிக்கப்பட்டன? தவறு நூல் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடைபெற்றிருக்கிறது என்பதை அமைச்சர் காந்தி தெரிவிப்பாரா?

கடந்த ஆண்டு, பொதுமக்களுக்கு கொடுத்த 100 சதவீதம் பருத்தி இருக்க வேண்டிய வேட்டியின் வார்ப் பகுதியில், வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருந்ததையும், மீதம் 78 சதவீதம் பாலியஸ்டர் இருந்ததையும் பரிசோதனை மூலம் கண்டறிந்து, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்டி உட்பட அனைத்து ஆதாரங்களுடன் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகாரளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாகவாசமாக ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்து, கடந்த ஆண்டு 100 சதவீதம் பருத்தி இருந்தது என்று அமைச்சர் பொய் சொல்கிறார்.

இத்தனை ஆண்டுகளில், தமிழக அரசின் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளின் தரத்தைப் பரிசோதனை செய்து, அவற்றில் தரக்குறைவானவற்றை நிராகரித்ததாகப் படித்திருக்கிறோமா? இத்தனை ஆண்டுகளில், இதுபோன்ற தரப்பரிசோதனை நடைபெறவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த ஆண்டு தமிழக பாஜக எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மூன்றாம் வாரத்தில் கைத்தறித் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற சண்முகசுந்தரம், கண்துடைப்புக்காக அல்லாமல் அதிகப்படியான மாதிரிகளை முதன்முறையாக தரப்பரிசோதனை செய்தும், தரம் குறைந்த வேட்டிகளை திருப்பி அனுப்பி, அவற்றின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை மீண்டும் அனுப்பக் கோரியிருந்தார். இறுதியாக, தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்ட வேட்டிகளின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் அரசு கொள்முதல் கிடங்குக்கு, பிப்.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், இல்லையேல் இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் கைத்தறித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் விதித்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x