Published : 12 Feb 2025 12:42 AM
Last Updated : 12 Feb 2025 12:42 AM

18 வயதுக்கு உட்பட்​ட​ சிறார்கள் பணம் கட்டி ஆன்லைனில் விளை​யாட அரசு தடை: புதிய விதிகள் என்னென்ன?

சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தடை விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தடை விதிக்கப்படுகிறது. மற்ற வயதினர் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட தடை விதிக்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், செயலி மற்றும் பிற சாதனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட கணக்கு தொடங்கும் போது கேஒய்சி கட்டாயம். அதன்படி, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி சரிபார்க்க வேண்டும். ஒருவர் ஆன்லைனில் ஒரு மணி நேரமாக விளையாடும்போது, அவருக்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அனைத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் நாள், வாரம், மாதம் என்றளவில் எவ்வளவு தொகைக்கு விளையாட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறிப்பாக விளையாட்டுக்குள் நுழையும் போது, 'ஆன்லைன் விளையாட்டு இயற்கையில் அடிமையாக்கும்; இந்த விளையாட்டுகள் போதை பொருளுக்கு நிகரானது' என்ற எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x