

சென்னை: உலகின் தலைசிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் 60-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது அரசு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி). தமிழகத்தில் இருந்து பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள வேலூர் சிஎம்சி- 46 மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகள்-55-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 48 இடங்களை அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளே பிடித்துள்ளன.
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் சிஇஓ வேர்ல்டு இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான 100 சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மருத்துவ கல்வியின் தரம், மாணவர் சேர்க்கை தகுதிகள், சிறப்புத் துறைகள், உலகளாவிய நன்மதிப்பு, ஆராய்ச்சி நடவடிக்கைகள், மாணவர்களின் மனதிருப்தி, வருடாந்திர கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
22-வது இடத்தில் 86.6 மதிப்பெண்களுடன் டெல்லி எய்ம்ஸ் கல்வி நிறுவனமும், 37-வது இடத்தில் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியும், 46-வது இடத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இந்தப் பட்டியலில் 78.77 மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) 60-வது இடத்தைப் பிடித்துள்ளது. 69-வது இடத்தில் வாரணசி பிஎச்யூ மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழகத்தில் இருந்து பட்டியலில் இடம்பெற்ற ஒரே அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி மட்டுமே. இந்தப் பட்டியலில் முதல் 21 இடங்களையும் மற்றும் மொத்தமாக 48 இடங்களையும் அமெரிக்காவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.