Last Updated : 11 Feb, 2025 10:56 PM

3  

Published : 11 Feb 2025 10:56 PM
Last Updated : 11 Feb 2025 10:56 PM

பொதுமக்களை ‘ஈர்க்காத’ பொருநை புத்தக திருவிழா - விற்பனையில் கடும் சரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 11 நாட்கள் நடத்தப்பட்ட நெல்லை பொருநை 8-வது புத்தக திருவிழாவுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்திருந்தது. பல்வேறு புதுமுயற்சிகளை கையாண்ட போதிலும்
கடந்த ஆண்டைவிட இம்முறை ரூ.20 லட்சம் மதிப்புக்கு புத்தக விற்பனை குறைந்திருந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து இங்குவந்து தங்கி புத்தக விற்பனையில் ஈடுபட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மையத்தில் நெல்லை பொருநை 8-வது புத்தக திருவிழா கடந்த 31-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவடைந்தது. இந்த புத்தக திருவிழாவில், 120-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புத்தக திருவிழாவுக்கு மாணவ, மாணவியரையும், பொதுமக்களையும் வரவழைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு இலவசமாக உண்டியல்கள் வழங்கப்பட்டிருந்தன.

புத்தக திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அப்போதைய மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் கடந்த ஆண்டு ரூ.2 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாகவும், அதைவிட அதிகமாக இம்முறை விற்பனையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக விற்பனை ரூ.20 லட்சத்துக்கு குறைந்து ரூ.1.80 கோடி மதிப்பில்தான் நடைபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்முறை புத்தக திரவிழாவின்போது நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் சௌந்தர மகாதேவன் கூறியதாவது: திருநெல்வேலி பொருநை புத்தகத் திருவிழாவுக்கு முன்னதாக இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டு சிறுகதை , கவிதை , நாடக பயிற்சி பட்டறைகள் தரப்பட்டன. மொத்தம் 225 பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு எழுத்தாளர்கள் படைப்பாற்றல் பயிற்சி அளித்தனர். அந்த மாணவ மாணவியர் வாட்ஸ் அப் குழுக்களில் இணைக்கப்பட்டு இந்த ஆண்டு முழுக்க எழுத்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ மாணவியர் அங்கம் வகிக்கும் மாணவர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டு 2 ஆயிரம் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் அவர்களுக்கான வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புத்தக திருவிழாவின்போது நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் 20 கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்து வழங்கினர்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டு இதழியல் பயிற்சி, கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, எழுத்தாளர் வாசகர் சந்திப்பு, கலை நிகழ்ச்சி வழங்கல் , மாலை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றல் என ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர். கல்லூரிக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறைகள் சார்பில் புத்தகத் திருவிழாவின் பத்து நாட்களும் மதியம் கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை, தூய தமிழில் பேசுதல், ஹைகூ எழுதுதல், ஒரு நிமிடப் பேச்சாற்றல், இலக்கிய வினாடி வினா, கதை சொல்லும் போட்டி, சிறுகதை எழுதும் போட்டி போன்ற போட்டிகளில் 600 மாணவ மாணவியர் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர். 250 அரசுப் பள்ளி மாணவர்கள் 10 நாட்களும் பங்கேற்றனர்.

கலைபண்பாட்டுத் துறை சார்பில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டு சிறந்த 30 ஓவியர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழா நடைபெற்ற நெல்லை வர்த்தக மையத்தை தூய்மையாக பராமரித்த 28 தூய்மை பணியாளர்களுக்கு நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசுகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பதிப்பித்த நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகளின் சிறப்பான வரவேற்பால் இந்த ஆண்டு நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கட்டுரைகள் எனும் 479 பக்க நூலையும், நெல்லை சீமையின் நாட்டார் நிகழ்த்து கலைகள் எனும் 200 பக்க நூலையும், உங்களுடன் ஐந்தே நிமிடம் எனும் நெல்லை மாவட்ட ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பையும் பள்ளி மாணவர்களின் எழுத்துகளையும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது என்றெல்லாம் பல்வேறு சிறப்புகளையும் தெரிவித்தார்.

ஆனால் இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெறும்போதெல்லாம் பொதுமக்கள் தன்னெழுச்சியாகவே புத்தக அரங்குகளுக்கு வந்து, பிடித்த புத்தகங்களை தேர்வு செய்யும் காட்சிகளை பார்க்க முடிந்தது. ஆனால் புத்தக கண்காட்சியை மாநகராட்சி வர்த்தக மைய அரங்குக்கு மாற்றியதில் இருந்து புத்தக திருவிழா என்பது பொதுமக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை வரவழைப்பதில் வெற்றிகண்டாலும், பொதுமக்களை வரவழைப்பதில் தோல்வியே மிஞ்சுகிறது. கடந்த ஆண்டை கட்டிலும் இம்முறை விற்பனை குறைந்துள்ளது இதையே எடுத்துக்காட்டுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளில் குறையில்லை. ஆனால் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் காணப்பட்டது குறித்து கடந்த 10 நாட்களாகவே சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல்பறந்தன. புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் பழைய முகங்களே மேடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் நிகழ்ச்சிகளை காணவருவதில் பொதுமக்களிடையே ஆர்வமில்லை. லியோனி பட்டிமன்றத்துக்கே கூட்டமில்லாத நிலை இருந்தது என்று இலக்கிய ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இம்முறை புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கண்காணித்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனை, புத்தக திருவிழாவின் தொடக்க நாளில் திடீரென்று பணியிட மாற்றம் செய்திருந்தனர். புத்தக திருவிழா நடைபெற்று கொண்டிருந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலியில் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.

இதனால் இந்த 2 நாட்களிலும் போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றெல்லாம் பல்வேறு காரணங்களால் மாநகராட்சி வர்த்தக மையத்துக்கு பொதுமக்கள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. வழக்கமாக புத்தக திருவிழா நடைபெறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரங்குகளில் அதிக கூட்டம் காணப்படும். ஆனால் இம்முறை அப்படி கூட்டத்தை காணமுடியவில்லை. இதனால் எதிர்பார்த்த விற்பனை இல்லை என்று வெளியூர்களில் இருந்து இங்குவந்து தங்கியிருந்து விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர். இம்முறை புத்தக திருவிழாவில் காணப்பட்ட நிறை, குறைகளை ஆராய்ந்து அடுத்த புத்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x